டிராவிட்டும் கோலியும் அதை செய்ததற்கு இதுதான் காரணம்..! விவிஎஸ் லக்‌ஷ்மண் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 5, 2021, 4:52 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும், இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியதற்கான காரணம் என்னவென்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்கள் அடித்தார். புஜாரா மற்றும் கில் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் அடித்தனர்.  கேப்டன் கோலி 36 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல், 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

540 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணி, 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி வெறும் 62 ரன்களுக்கு சுருண்டதால் 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுத்து 2வது இன்னிங்ஸை தொடர்ந்து பேட்டிங் ஆட விட்டிருக்கலாம். இந்திய பவுலர்களும் சோர்வாக இல்லை. ஏனெனில் மொத்தமாகவே 28 ஓவர்கள் தான் வீசியிருந்தனர். எனவே இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்திருந்தால், இன்னிங்ஸ் வித்தியாசத்தில் கூட வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அதை செய்யாத இந்திய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.

இந்நிலையில், இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியதற்கான காரணத்தை கூறியுள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.

இதுகுறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால், இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்று பேட்டிங் ஆடுவது அவர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். குறிப்பாக கோலி, புஜாரா ஆகியோர் சதமடித்து நீண்டகாலம் ஆகிவிட்டதால், அவர்கள் பேட்டிங் ஆடுவது நல்லது. எனவே தான் டிராவிட்டும் கோலியும் ஃபாலோ ஆன் கொடுக்காமல், 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளனர் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!