BCCI Awards 2023: ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சுப்மன் கில்லிற்கு சிறந்த வீரருக்கான விருது!

By Rsiva kumar  |  First Published Jan 23, 2024, 3:23 AM IST

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சுப்மன் கில்லிற்கு சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2006-07 ஆம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. C. K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994 இல் வழங்கப்பட்டது. இது ஒரு முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2006-07 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பிசிசிஐ விருதுகள் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2020 முதல் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ தற்போது விருதுகள் அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதில், வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்படுகிறது. அதே போன்று சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லிற்கு வழங்கப்படுகிறது. கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் பிசிசிஐயின் சார்பில் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட உள்ளது.

இதே போன்று கடந்த 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (5 சதங்கள்) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ விருது வழங்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணம் காரணமாக விராட் கோலி இடம் பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!