அயோத்தியில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட 5 வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 5 வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார். வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ராமர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, குழந்தை ராமர் சிலை முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
தொடர்ந்து, பூசாரிகளுக்கு மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை காணிக்கையாக பிரதமர் வழங்கினார். பின்னர், ராமர் கோயிலை அவர் சுற்றிப்பார்த்தார். அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விராட் கோலி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கலந்து கொண்டதற்கான புகைப்படங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதே போன்று தான் இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை. மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் தோனி கலந்து கொள்வதில்லை. ஆனால், மற்ற நிகழ்வுகளில் எல்லாம் தோனி கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தோனி தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியைப் போன்று தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் கலந்து கொள்ளவில்லை.