ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சஞ்சு சாம்சன் பக்குவமான கேப்டனாக தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் தான் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல்லில் 147 போட்டிகளில் ஆடி 3738 ரன்களை குவித்துள்ள சஞ்சு சாம்சன், 11 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் ஆடி முறையே 330 மற்றும் 301 ரன்கள் அடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது விமர்சனத்துக்குள்ளாகிறது.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்டகாலமாக ஆடிவரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் சஞ்சு சாம்சன். ஃபைனலில் குஜராத்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து விலகினார் கேஎல் ராகுல்..! ஷுப்மன் கில் ரூட் கிளியர்
இந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று நல்ல நிலையில் உள்ளது. சஞ்சு சாம்சன் ஆவேசமோ, அவசரமோ படாமல், இக்கட்டான சூழல்களில் கூட வீரர்கள் மீது அழுத்தம் போடாமல் நிதானமாக செயல்படுகிறார். அதைக்கண்ட பலரும் சாம்சன் தோனியை போன்ற கேப்டன் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் கேப்டன்சி குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, சஞ்சு சாம்சன் பக்குவப்பட்ட, முதிர்ச்சியான கேப்டன். ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்துகிறார். ஒரு சிறந்த கேப்டன் மட்டுமே 3 ஸ்பின்னர்களுடன் ஆடுவார்; அவர்கள் மூவரையும் ஸ்மார்ட்டாக பயன்படுத்துவார். அப்பேர்ப்பட்ட சிறந்த கேப்டன் சஞ்சு சாம்சன் என்று ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் ஆடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய மூவருமே சீனியர் ஸ்பின்னர்கள். அஷ்வின் - சாஹல் கட்டாயம் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார்கள். எதிரணி, கண்டிஷனை பொறுத்து ஸாம்பா ஆடுகிறார். இவர்கள் மூவரையும் சஞ்சு சாம்சன் சிறப்பாக பயன்படுத்திவரும் சூழலில்தான் அவரது கேப்டன்சியை ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.