சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் ஆட வாய்ப்பளித்துவிட்டு, அதன்பின்னர் தான் அவர் அணிக்கு வேண்டுமா வேண்டாமா, மேலும் வாய்ப்பளிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை தழுவி ஏமாற்றமளித்த நிலையில், சீனியர் வீரர்களை ஒதுக்கிவிட்டு சிறந்த இளம் வீரர்களை கொண்டு வலுவான டி20 அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இஷான் கிஷன், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா என இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் ஆடிராத நியூசிலாந்து சுற்றுப்பயணம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இந்த போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை ஆடவைத்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர்.
சஞ்சு சாம்சன் இயல்பான திறமைசாலி. பெரிய ஷாட்டுகளை அலட்டலின்றி அசால்ட்டாக அடிக்கக்கூடியவர். அதிரடியாக ஆடக்கூடிய சாம்சன், அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி அசத்தும் வீரர். இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், நிலையான, சீரான ஆட்டத்தை ஆடாததுதான் அவரது பெரிய பிரச்னை. அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் வாய்ப்பளித்துவிட்டு இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒதுக்கிவிடுகிறது. இதுதான் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது.
அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்து. அதையேதான் இப்போது முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, சஞ்சு சம்சனுக்கு தொடர்ச்சியாக 10 போட்டிகள் ஆட வாய்ப்பளிக்க வேண்டும். ஒரு போட்டியில் ஆடவைத்துவிட்டு, பின் நீக்கக்கூடாது. மற்ற யாரை வேண்டுமானாலும் உட்காரவைத்துவிட்டு, சாம்சனை10 போட்டிகள் ஆடவையுங்கள். அதன்பின்னர் அவருக்கு மேலும் வாய்ப்பளிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுங்கள் என்றார் ரவி சாஸ்திரி.
சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 16 டி20 போட்டிகளில் ஆடி 296 ரன்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 77 ரன்கள் ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 135.16 ஆகும்.