அந்த பையனை நேரடியாக காண்ட்ராக்ட்ல எடுங்க..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி வேண்டுகோள்

By karthikeyan VFirst Published May 18, 2022, 8:54 PM IST
Highlights

உம்ரான் மாலிக்கை பிசிசிஐ நேரடியாக வருடாந்திர ஊதிய ஒப்பந்த வீரர்களில் ஒருவராக சேர்க்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. குறிப்பாக இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. உம்ரான் மாலிக், யஷ் தயால், மோசின் கான், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், குல்தீப் சென் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

இவர்களில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுவதுடன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்து, 2வது அதிவேக பந்து. இவர் அக்தரின் அதிவேக பந்து சாதனையையே தகர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேகமாக வீசுவது மட்டுமல்லாது, விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் தேவைப்பட்ட போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்டு கொடுத்துள்ளார். 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உம்ரான் மாலிக்கின் பவுலிங்கை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் புகழ்ந்துவருவதுடன், அவர் கூடிய விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில், உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் நேரடியாக உம்ரான் மாலிக்கை சேர்க்க வேண்டும். அவரை இந்திய அணி பவுலிங் யூனிட்டுடன் சேர்த்து, ஷமி, பும்ராவிடமிருந்து நேரடியாக பக்கத்திலிருந்து பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அதன்மூலம் பும்ரா, ஷமி ஆகியோர் அவர்களது பணிச்சுமையை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை உம்ரான் மாலிக் பக்கத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும். தாமதப்படுத்தாமல் அவரைஉடனடியாக அணியில் சேர்க்க வேண்டும். பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தின் உதவியுடன் அவரை விரைவாக வளர்த்துவிட வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

click me!