தேர்வு செய்த அணியை மாற்றினால் தேர்வாளர்கள் கண்டிப்பா பதவி விலகணும்..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 6, 2021, 9:55 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்த பாகிஸ்தான் அணியை மாற்றினால் தேர்வாளர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான், ஷோயப் மாலிக் ஆகிய வீரர்கள் அணியில் எடுக்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒருசில மணி நேரங்களில் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் பயிற்சியாளர் பதவிகளிலிருந்து விலகினர். 

அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கை அணியில் எடுக்க வேண்டும் என்று கேப்டன் பாபர் அசாம் எவ்வளவோ வலியுறுத்தியும் தேர்வாளர்கள் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. மாலிக், ஜமான் புறக்கணிக்கப்பட்ட அதேவேளையில், விக்கெட் கீப்பராக அசாம் கான் எடுக்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு மீது கேப்டன் பாபர் அசாமே அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வை ஆய்வு செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவிடம் பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷீத் லத்தீஃப், டி20 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி மாற்றப்படக்கூடாது. அப்படி  மாற்றினால் சரியான வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என்று அர்த்தம். அப்படியென்றால், தங்கள் பணியை சரியாக செய்யவில்லை. எனவே அணி மாற்றப்பட்டால் தேர்வாளர்கள் பதவி விலக வேண்டும் என்று ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
 

click me!