போயும் போயும் இவரையா விக்கெட் கீப்பரா எடுத்தீங்க..? பாகிஸ்தான் அணி தேர்வை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 7, 2021, 9:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அசாம் கானை எடுத்திருப்பதை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஆசிஃப் அலி, அசாம் கான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, சொஹைப் மக்சூத். 

இந்த அணியில் அனுபவ வீரர்களான ஷோயப் மாலிக், வஹாப் ரியாஸ், முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அகமது ஆகியோர் எடுக்கப்படவில்லை.

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அசாம் கான் எடுத்திருப்பதை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லத்தீஃப், அசாம் கானை பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் எடுப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில் அவர் நல்ல பேட்ஸ்மேன். ஆனால் விக்கெட் கீப்பராக எடுத்திருப்பதைத்தான் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

பாகிஸ்தான் அணியுடன் பயணித்துவந்த சீனியர் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் அகமது அணியில் எடுக்கப்படவில்லை. அப்படியென்றால், செலக்‌ஷன் பாலிசி தோல்வியடைந்துவிட்டது என்றுதான் அர்த்தம். அசாம் கானை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக எடுத்திருக்கக்கூடாது என்று ரஷீத் லத்தீஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!