வங்கதேசத்தை பங்கம் செய்து ரஷீத் கான் படைத்த சாதனைகளின் பட்டியல்

By karthikeyan VFirst Published Sep 10, 2019, 11:04 AM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த ரஷீத் கான், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தினார். இந்த போட்டியில் ஒரு கேப்டனாக தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை முன்னின்று வழிநடத்திச்சென்ற ரஷீத் கான் பல சாதனைகளை படைத்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சென்று ஆடிய ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ரஷீத் கான் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபிறகு, அவரது கேப்டன்சியில் ஆடிய முதல் போட்டி இது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரஹ்மத் ஷாவின் அபார சதம், அஸ்கர் ஆஃப்கான் மற்றும் ரஷீத் கானின் பொறுப்பான அரைசதத்தால், ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர்கள் சோபிக்காத நிலையில், அந்த அணியின் முக்கியமான தலைகளான ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய மூவரையும் நிலைக்கவிடாமல் ரஷீத் கான் வீழ்த்திவிட்டார். இவர்கள் மூவர் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை ரஷீத் கான் வீழ்த்தினார். முகமது நபி தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஃப்கான் ஸ்பின்னர்களிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் அடித்து மொத்தமாக 397 ரன்கள் முன்னிலை பெற்றது. 398 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. நான்காம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

கடைசி நாள் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற, வெறும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதும் என்றிருந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி உறுதியானது. ஆனால் கடைசி நாள் ஆட்டத்தின் இரண்டு சீசன்கள் மழையால் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் மாலை 4 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது. வெறும் 20 ஓவர்கள் மட்டுமே பந்துவீசும் நிலை உருவானது. அதனால் அதற்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி இருந்தது. 

ஒருநாளில் முக்கால்வாசி ஆட்டத்துக்கு மேல் பாதிக்கப்பட்டும் கூட, ஆஃப்கானிஸ்தான் அணி மனதை தளரவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்தி ஜாகிர் கான் பிரேக் கொடுத்தார். அதன்பின்னர் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் ரஷீத் கான் வீழ்த்திவிட்டார். இதையடுத்து வங்கதேச அணி 173 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அரைசதம் அடித்த ரஷீத் கான், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தினார். இந்த போட்டியில் ஒரு கேப்டனாக தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை முன்னின்று வழிநடத்திச்சென்ற ரஷீத் கான் பல சாதனைகளை படைத்துள்ளார். அவற்றை பார்ப்போம்.

1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இளம் டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை, இந்த போட்டிக்கு கேப்டன்சி செய்ததன் மூலம் பெற்ற ரஷீத் கான், முதல் டெஸ்ட் வெற்றியை ருசித்த இளம் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

2. கேப்டனாக ஆடிய முதல் போட்டியிலேயே அரைசதமும் அடித்து, 10 விக்கெட்டையும் வீழ்த்த முதல் கேப்டன் ரஷீத் கான் தான். 
 

click me!