LSG vs RCB: பிளே ஆஃபில் ஆர்சிபிக்காக முதல் சதமடித்து ரஜத் பட்டிதார் சாதனை! LSGக்கு கடின இலக்கை நிர்ணயித்த RCB

By karthikeyan VFirst Published May 25, 2022, 10:11 PM IST
Highlights

லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி ரஜத் பட்டிதாரின் சதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 207 ரன்களை குவித்து, 208 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது. 
 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று நடந்துவரும் எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டி 40 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.

டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியில் 2 மாற்றங்களும் ஆர்சிபி அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டன. லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கௌதம், ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு நீக்கப்பட்டு க்ருணல் பாண்டியா, துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டனர். ஆர்சிபி அணியில் சிராஜ் வந்ததால் சித்தார்த் கவுல் நீக்கப்பட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), ராகுல் (கேப்டன்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மனன் வோரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மோசின் கான், ஆவேஷ் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.

ஆர்சிபி அணி:

டுப்ளெசிஸ் (கேப்டன்), கோலி, ரஜாத் பட்டிதார், மேக்ஸ்வெல், லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஹேசில்வுட், சிராஜ்.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாஃப் டுப்ளெசிஸ் கோல்டன் டவுட்டாக, மேக்ஸ்வெல் 9 ரன்னிலும், விராட் கோலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியின் முக்கியமான 3 வீரர்களும் சோபிக்காதபோதிலும், அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதார் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். பட்டிதாருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடினார். 

கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் ஆகிய 3 பெரிய வீரர்களும் சொதப்பிய நிலையில், ரஜத் பட்டிதார் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார். அதிரடியாக ஆடிய ரஜத் பட்டிதார், 54 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த சீசன் முழுக்க ஆர்சிபிக்காக இன்னிங்ஸ்களை சிறப்பாக முடித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் 23 பந்தில் 37 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார்.

20 ஓவரில் 207ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 208 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம், பிளே ஆஃபில் ஆர்சிபிக்காக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் பட்டிதார் படைத்துள்ளார். கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஆர்சிபிக்காக ஆடியபோதிலும், அவர்கள் யாரும் பிளே ஆஃபில் செய்யாத சாதனையை ரஜத் பட்டிதார் செய்துள்ளார்.
 

click me!