#MIvsRR அதிரடியா ஆரம்பித்து கடைசியில் கோட்டைவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்! ராகுல் சாஹர், பும்ரா, போல்ட் அபார பவுலிங்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 5:28 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்து, 172 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளேயில் தலா 2 ஓவர்களை வீசிய டிரெண்ட் போல்ட்டும் பும்ராவும் அருமையாக வீசி அதிக ரன்களை கொடுக்காமல் நன்றாக கட்டுப்படுத்தினர்.

ஆனாலும் பவர்ப்ளேயின் கடைசி 2 ஓவர்களில் ஜெயந்த் யாதவ் மற்றும் குல்ட்டர்நைலின் பவுலிங்கை அடித்து ஆடியது பட்லர் - ஜெய்ஸ்வால் ஜோடி. அதிரடியாக ஆடிய பட்லரை 41 ரன்னில் தனது முதல் ஓவரிலேயே வீழ்த்திய ராகுல் சாஹர், தனது அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலை 32 ரன்னில் வீழ்த்தினார்.

10 ஓவரில் ராஜஸ்தான் அணி 91 ரன்களை குவித்தது. பட்லரும் ஜெய்ஸ்வாலும் அவுட்டான பிறகு, சஞ்சு சாம்சன் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். ஆனால் ஷிவம் துபே, பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் திணறி பந்துகளை வீணடித்து, 31 பந்தில் வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 27 பந்தில் 42 ரன்கள் அடித்து, அதற்கு முந்தைய ஓவரான போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகே, ரன்வேகம் குறைந்தது. ஷிவம் துபேவும் சொதப்பலாக ஆடி 19வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் ஒரு நோ பாலுடன் சேர்த்து 6 பந்துகளை எதிர்கொண்ட ரியான் பராக், வெறும் 7 ரன் மட்டுமே அடித்தார். கடைசி பந்தில் மில்லர் பவுண்டரி அடிக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, 172 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

மும்பை அணியின் சார்பில் ராகுல் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்த, பும்ரா மற்றும் போல்ட் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ராஜஸ்தான் அணியை 171 ரன்களில் கட்டுப்படுத்த உதவினார்.
 

click me!