உங்ககிட்ட எக்ஸ்ட்ரா பிளேயர்ஸ் இருந்தா எங்களுக்கு தாங்களேன்.. மற்ற அணிகளிடம் பரிதாபமா கையேந்தும் ராஜஸ்தான் அணி

By karthikeyan VFirst Published Apr 26, 2021, 3:48 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 4 வெளிநாட்டு வீரர்கள் விலகியதால், மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை கேட்கும் நிலை அந்த அணிக்கு உருவாகியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 4 வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகி வெளியேறியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டோன் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களும் காயம் மற்றும் மற்ற காரணங்களால் இந்த சீசனிலிருந்து விலகினர். இதையடுத்து ராஜஸ்தான் அணியில் பட்லர், மில்லர், மோரிஸ் மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் ஒருவரால் ஆடமுடியாமல் போனால் கூட ராஜஸ்தான் அணியின் நிலை மேலும் பரிதாபமாகும். இந்நிலையில், வெளிநாட்டு வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஐபிஎல் விதியின் அடிப்படையில்,  மற்ற அணிகளிடமிருந்து வெளிநாட்டு வீரர்களை கேட்டுள்ளது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் லீக் சுற்றின் முதல் 20 போட்டிகள் முடிந்த பின்னர், மற்ற அணிகளிடமிருந்து வீரர்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஐபிஎல் உள்ளது. அதன்படி, இரு அணிகளிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களை கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற அணிகளிடம் இருக்கும் கூடுதல் வீரர்களில், ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பே இல்லை என்றால், அப்படியான வீரர்களை சும்மா வைத்துக்கொண்டிருப்பதைவிட தேவைப்படும் அணிக்கு வழங்குவது நல்லதே. அந்தவகையில், அப்படியான வீரர்கள் இருந்தால், தங்கள் அணிக்கு தரும்படி ராஜஸ்தான் அணி கோரியுள்ளது.

ராஜஸ்தான் அணி தங்களிடம் வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் தரும்படி கேட்டிருப்பதாக, 2 அணிகளின் சி.இ.ஓக்கள் கிரிக்பஸ் இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர். அப்படி மற்ற அணிகளிடமிருந்து ராஜஸ்தான் அணிக்கு செல்லும் வீரர்கள், அவர்கள் சார்ந்திருந்த அந்த குறிப்பிட்ட அணிக்கு எதிராக களமிறங்க முடியாது.
 

click me!