பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று கவுகாத்தி மைதானத்தில் நடந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபனிங் இறங்கி விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் கவுகாத்தி மைதானத்தில் இன்று நடந்து வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் சரவெடியாக வெடித்தார். அவர் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் சர்மாவும் தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
எனினும், பானுகா ராஜபக்ஷா 1 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். சிக்கந்தர் ராஸா (1), ஷாருக் கான் (11), ஜித்தேஷ் சர்மா (27) என்று ரன்கள் சேர்த்தனர். ஒரு பக்கம் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய ஷிகர் தவான் 36 பந்துகளில் தனது 50ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 86 ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
பந்து வீச்சு தரப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு ரன் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். சஹால் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 198 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்கினார். ஆனால், அவருடன் ஜோஸ் பட்லர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார்.
இதன் மூலமாக 10 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் முறையாக தொடக்க வீரராக ஓபனிங் இறங்கியுள்ளார். ஆனால், அவர் ரன் ஏதும் எடுக்காமல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மைக்கேல் ஹஸ்ஸி உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியுள்ளார். அந்தப் போட்டியில் அவர் 13 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். தற்போது வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.