#IPL2021 மற்ற அணிகளிடமிருந்து ராஜஸ்தான் தட்டி தூக்கும் 3 முரட்டு வெளிநாட்டு வீரர்கள்..!

By karthikeyan VFirst Published Apr 27, 2021, 7:44 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 4 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில், மற்ற அணிகளிடமிருந்து ராஜஸ்தான் அணி பெற வாய்ப்புள்ள 3 வெளிநாட்டு வீரர்களை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 4 வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகி வெளியேறியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டோன் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களும் காயம் மற்றும் மற்ற காரணங்களால் இந்த சீசனிலிருந்து விலகினர். இதையடுத்து ராஜஸ்தான் அணியில் பட்லர், மில்லர், மோரிஸ் மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் ஒருவரால் ஆடமுடியாமல் போனால் கூட ராஜஸ்தான் அணியின் நிலை மேலும் பரிதாபமாகும். இந்நிலையில், வெளிநாட்டு வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஐபிஎல் விதியின் அடிப்படையில், ராஜஸ்தான் அணி சில வீரர்களை பெறலாம். அப்படி மற்ற அணிகளிடமிருந்து பெற வாய்ப்புள்ள 3 வெளிநாட்டு வீரர்களை பார்ப்போம்.

1. ஜேசன் ராய்(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ் விலகியதையடுத்து எடுக்கப்பட்ட வீரர் இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய். பேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்சன், ரஷீத் கான், ஜேசன் ஹோல்டர், முகமது நபி ஆகிய வீரர்களை தாண்டி ஆடும் லெவனில் ராய்க்கு வாய்ப்பு கிடைக்காது. இதுவரை ஆடிய போட்டிகளில் ராய் ஆடவில்லை. எனவே அவர் ராஜஸ்தான் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.

2. சாம் பில்லிங்ஸ் (டெல்லி கேபிடள்ஸ்)

டெல்லி கேபிடள்ஸ் அணியில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், இதுவரை அந்த அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. டெல்லி அணியில் ஸ்மித், ஹெட்மயர், ரபாடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய நால்வருமே முன்னணி 4 வெளிநாட்டு வீரர்களாக ஆடுகின்றனர். இவர்களை தவிர இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா ஆகியோரும் இருப்பதால், சாம் பில்லிங்ஸுக்கு டெல்லி அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. அதனால் ராஜஸ்தான் அணியின் ஆப்சனாக சாம் பில்லிங்ஸும் இருக்க வாய்ப்புள்ளது.

3. டேவிட் மாலன் (பஞ்சாப் கிங்ஸ்)

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மாலனை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் டேவிட் மாலனுக்கு இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. கெய்ல், பூரன், கிறிஸ் ஜோர்டான், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஃபேபியன் ஆலன், ரிலே மெரிடித் ஆகியோர் ஆடுகின்றனரே தவிர, இதுவரை மாலனுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே அவருக்கும் ராஜஸ்தான் அணியில் இணைய வாய்ப்பிருக்கிறது.
 

click me!