வெளிநாட்டு வீரர்கள் பயப்படாதீங்க! உங்களையெல்லாம் உங்க நாட்டுக்கு பாதுகாப்பா அனுப்புறது எங்க பொறுப்பு - பிசிசிஐ

By karthikeyan VFirst Published Apr 27, 2021, 6:40 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி உறுதியளித்துள்ளது பிசிசிஐ.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனை பாதுகாப்பான முறையில் நடத்திவருகிறது பிசிசிஐ.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாமலும், இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டாலும் படலாம் என்ற பயத்திலும், ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா ஆகிய ஆஸி., வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி ஆஸி.,க்கு திரும்பினர். 

தமிழகத்தை சேர்ந்த டெல்லி கேபிடள்ஸ் வீரர் அஷ்வினும், கொரோனா நேரத்தில் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக கூறி ஐபிஎல்லில் இருந்து பாதியில் விலகிவிட்டார்.

ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட்டை மகிழ்ந்து ஆடினாலும் அவர்களுக்குள் பயம் இருக்கலாம். ஆனால் அப்படியான எந்த பயமும் தேவையில்லை என்றும், ஐபிஎல்லில் ஆடி முடிக்கும் வரை அனைத்து வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பிசிசிஐயின் பொறுப்பு என்றும் பிசிசிஐ சி.ஒ.ஒ வீரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஹேமங் அமின், உங்களில் பலருக்கு(வெளிநாட்டு வீரர்கள்) ஐபிஎல் முடிந்ததும் எப்படி தங்கள் வீடுகளுக்கு திரும்புவது என்ற யோசனை இருக்கலாம். ஆனால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. உங்களை எந்த பிரச்னையும் இல்லாமல் அனுப்பிவைக்க வேண்டியது பிசிசிஐயின் பொறுப்பு. இந்திய அரசுடன் இணைந்து பிசிசிஐ மிகவும் உன்னிப்பாக சூழல்களை கவனித்துவருகிறது. எனவே உங்கள் அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பிவைப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
 

click me!