RR vs RCB:ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது! பட்லர் சதம்; ஃபைனலுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி

By karthikeyan VFirst Published May 27, 2022, 11:03 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான 2வது தகுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 
 

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறிவிட்ட நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி இடையேயான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் தோற்ற சஞ்சு சாம்சன், முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்றார்.

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் செம கெத்தாக களமிறங்கின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் கோலி 7 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். கேப்டன் டுப்ளெசிஸும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 13 பந்தில் 24 ரன்கள் அடித்தார். எலிமினேட்டரில் கோலி, டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் சொதப்பியபோது, அபாரமாக ஆடி சதமடித்த ரஜத் பட்டிதார், இந்த போட்டியிலும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 58 ரன்கள் அடித்த பட்டிதாரை அஷ்வின் வீழ்த்தினார்.

லோம்ரார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற,பெரிய ஸ்கோரை நோக்கிச்சென்ற ஆர்சிபியை 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்காய் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

158 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும் ஜெய்ஸ்வாலும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 61 ரன்களை குவித்தனர். 13 பந்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால். சாம்சன் 21 பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஜோஸ் பட்லர் சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று இலக்கை எட்டி போட்டியை முடித்துவைத்தார். இந்த சீசனில் 800 ரன்களுக்கு மேல், ஐபிஎல்லில் ஒரு சீசனில் 800 ரன்களுக்கு மேல் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார் பட்லர். இந்த சீசனில் இது அவரது 4வது சதம். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 4 சதங்களுடன் விராட் கோலியை சமன் செய்துள்ளார் பட்ல 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை தூக்க வேண்டும் என்ற ஆர்சிபியின் கனவு மீண்டும்  தகர்ந்தது. 
 

click me!