IPL 2023: டெல்லி கேபிடள்ஸுக்கு தொடர்ச்சியாக 3வது தோல்வி..! ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

By karthikeyan V  |  First Published Apr 8, 2023, 8:16 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியதால் இரு அணிகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

Latest Videos

டேவிட் வார்னர் (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரைலீ ரூசோ, ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், அபிஷேக் ஷர்மா, அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் பவுண்டரிகளாக விளாசி, அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 25 பந்தில் அரைசதம் அடித்தார். ஜெய்ஸ்வால் - பட்லரின் அதிரடியால் பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 68  ரன்களை குவித்தது.

31 பந்தில் 60 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன்(0), ரியான் பராக்(7) ஆகிய இருவரும் சொதப்பினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 51 பந்தில் 78 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரான் ஹெட்மயர் 21 பந்தில் 4 சிக்ஸர்களை விளாசி 39 ரன்கள் அடித்து இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

200 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மனிஷ் பாண்டேவும் டக் அவுட்டானார். இவர்கள் இருவரையுமே முதல் ஓவரிலேயே டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார். ரைலீ ரூசோ 14 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 24 பந்தில் 38 ரன்கள் அடிக்க அவரையும் டிரெண்ட் போல்ட்டே வீழ்த்தினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 65 ரன்கள் அடித்தபோதிலும் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 20 ஓவரில் 142 ரன்கள் அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி தோற்றது. முதல் 2 போட்டிகளிலும் தோற்ற டெல்லி அணி, இந்த போட்டியிலும் தோற்றது. 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!