IPL 2023: சிஎஸ்கேவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan V  |  First Published Apr 27, 2023, 11:17 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

Latest Videos

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சாஹல்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.

IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். 

அதன்பின்னர் பின்வரிசையில் த்ருவ் ஜுரெல் அதிரடியாக ஆடி 15 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 13 பந்தில் 23 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 202 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து ராஜஸ்தான் அணி சாதனை படைத்தது.

203 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 16 பந்தில் 8 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பந்துகளை வீணடித்துவிட்டு அவுட்டாகி சென்றார் கான்வே. அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 29 பந்தில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் அஜிங்க்யா ரஹானேவும் 15 ரன்களுக்கு நடையை கட்டினார். ரஹானேவை வீழ்த்திய அஷ்வின், அதே ஓவரிலேயே அம்பாதி ராயுடுவையும் (0) வீழ்த்தினார்.

IPL 2023: தோனி நினைப்பதை அந்த பையன் செய்கிறான்.. அதனால் தோனி அவனை ரிமோட் கன்ட்ரோல் மாதிரி யூஸ் பண்றாரு..!

ஷிவம் துபே சிக்ஸர்களாக பறக்கவிட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய மொயின் அலியும் 23 ரன்களுக்கு ஆடம் ஸாம்பாவின் பந்தில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷிவம் துபே கடைசிவரை களத்தில் இருந்தும் கூட சிஎஸ்கே அணியால் இலக்கை அடிக்க முடியவில்லை. இதையடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 
 

click me!