இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 6:01 PM IST
Highlights

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்று பேசப்படும் சூழலில், அதுகுறித்து ராகுல் டிராவிட்டே பேசியிருக்கிறார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ம் ஆண்டிலிருந்து ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவரது பதவிக்காலம் 2019ல் முடிந்த நிலையில், மீண்டும் அவரே பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம், வரும் அக்டோபர் - நவம்பரில் நடக்கும் டி20 உலக கோப்பையுடன் முடிகிறது.

கடந்த முறையே, அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்ற பேச்சு இருந்தது. ஆனால் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கக்கூட இல்லை. ஆனால், இம்முறை இலங்கைக்கு சென்ற இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டதையடுத்து, அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்று பேசப்பட்டுவருகிறது. 

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலக கோப்பையுடன் முடிவடையவுள்ளதால், அடுத்த நிரந்தர பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும், ஆர்வமும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்த பின்னர் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையாகவே, அதைத்தாண்டி பெரிதாக நான் எதையும் யோசிக்கவேயில்லை. நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதிலேயே நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். 

இந்த இலங்கை சுற்றுப்பயணத்தைத் தாண்டி நான் எதையும் யோசிக்கவில்லை. இந்த இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நிரந்தர பயிற்சியாளர் ஆவது குறித்து நான் சிந்திக்கவில்லை. முழுநேர பயிற்சியாளராக செயல்படுவதில் பல சவால்கள் உள்ளன. எனவே இப்போதைக்கு முழுநேர பயிற்சியாளர் ஆவது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்றார் ராகுல் டிராவிட்.
 

click me!