டி20 உலக கோப்பைக்கு எந்தெந்த ஸ்பின்னர்களை இந்திய அணியில் எடுக்கலாம்..? ராகுல் டிராவிட் அதிரடி பதில்

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 3:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த ஸ்பின்னர்களை இந்திய அணியில் எடுக்கலாம் என்ற கேள்விக்கு இலங்கை தொடருக்கான பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக அங்கு இருப்பதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கியது.

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட் செயல்பட்டார். இலங்கைக்கு எதிரான தொடர், இந்திய அணியில் ஆடுவதற்கான அனைத்து தகுதிகளும் திறமையும் இருந்தும், அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவந்த இளம் வீரர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்தது.

ஆனால் அந்த வாய்ப்பை பல இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. குறிப்பாக சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தனர். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

சாஹல் - குல்தீப் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து ஆட வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவருமே தங்கள் பணியை சரியாக செய்தனர். கூடுதலாக ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய ஸ்பின்னர்களும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு பெற்றனர். ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவும் ஆடினார்.

டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி டி20 தொடர் இது என்பதால், இந்த தொடரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற தங்களுக்கான வாய்ப்பாக கருதியே பலரும் ஆடினர்.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான ஸ்பின்னர்களாக யார் யார் தேர்வு செய்யலாம் என்று தொடருக்கு பின்னர், இந்த தொடருக்கான இந்திய அணி பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட்,  என்னால் அப்படி குறிப்பிட்டு யாரையும் சொல்லமுடியாது. நான் இந்த அணியின் பயிற்சியாளர். என்னால் வெளிப்படையாக அதை சொல்லமுடியாது. அவர்கள் அனைவருமே அருமையாக ஆடினார்கள். அதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். அணியில் இந்தளவிற்கான டெப்த்தை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். தேர்வாளர்கள், 2-3 அல்லது அதற்கும் மேலாக ஸ்பின்னர்களை தேர்வு செய்தால் கூட பரவாயில்லை. எந்தெந்த ஸ்பின்னர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்வாளர்களுக்கு தெரியும் என்று ராகுல் டிராவிட் பதிலளித்தார்.
 

click me!