
டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நிறைய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அணி தேர்வு மிகச்சவாலாக இருக்கும்.
ரோஹித், கோலி, ராகுல், சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகிய பெரிய வீரர்கள் இல்லாமல் ஆடிய தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் ஆகியோர் அபாரமாக ஆடினர். ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக அசத்துகிறார்.
பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ரா, ஷமி ஆகியோர் இல்லாத இந்திய அணியில் ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகிய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். புவனேஷ்வர் குமார் அருமையாக வீசிவருகிறார். சீனியர் பவுலர்கள் தவிர, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் ஃபாஸ்ட் பவுலர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக ஆடிவருகின்றனர். இவர்கள் தவிர சஞ்சு சாம்சன் இருக்கிறார். கேஎல் ராகுலும் விக்கெட் கீப்பிங் செய்வார். எனவே இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பை நெருங்க நெருங்க, இறுதி அணியை விரைவில் தேர்வு செய்வது அவசியம். 15 வீரர்களைத்தான் டி20 உலக கோப்பைக்கு அழைத்துச்செல்ல விரும்புவீர்கள். ஆனால் டாப் 18-20 வீரர்களை சீக்கிரம் முடிவு செய்தாக வேண்டும். அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களை பார்த்துவிட்டு வேகமாக முடிவு செய்ய வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.