
தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடித்தவர் ரிஷப் பண்ட். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், தோனியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும், ரசிகர்களின் அபிப்ராயத்தையும் பெற்றார்.
ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஐபிஎல்லில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், கேப்டன்சியிலும் சுமாராகவே செயல்படுகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 4வது டி20 போட்டியில் 23 பந்தில் வெறும் 17 ரன் மட்டுமே அடித்தார். கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டே ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீச, அதை விரட்டி அடிக்க முயன்றே திரும்பத் திரும்ப அவுட்டானார். செய்த தவறையே ரிஷப் பண்ட் திரும்பத் திரும்ப செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், தினேஷ் கார்த்திக்கும் அண்மைக்காலத்தில் அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளதால் ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம் இந்திய அணியில் அவரது இடம் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், ரிஷப் பண்ட் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினால் ரிஷப் பண்ட்டுக்கு நெருக்கடி அதிகரிக்கும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பு சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இருக்கின்றனர். ரிஷப் பண்ட் எப்போதும் அவரது 100 சதவிகித திறனை வெளிப்படுத்த முனைவதாக தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுமே அதைத்தான் செய்வார்கள். அதனால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரது ஷாட் செலக்ஷனை பற்றி பேசினால், பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை; பவுண்டரி லைனை தாண்டி விழுந்தாலே போதும் என்று பார்த்திவ் படேல் கூறியிருக்கிறார்.