
ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி வீரர்களை அலறவிட்டார். தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார். ஐபிஎல் 15வது சீசனில் உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சீசனின் 2வது அதிவேக பந்து. இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார் லாக்கி ஃபெர்குசன்.
ஐபிஎல்லில் அதிவேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார் உம்ரான் மாலிக். வலைப்பயிற்சியில் கூட, 163.7 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வீசிய அதிவேக பந்தை (161.3) விட வேகமான பந்து இது. ஆனால் போட்டிக்களத்தில் வீசாமல் பயிற்சியில் வீசியதால் சர்வதேச கிரிக்கெட் சாதனையில் இடம்பெறமுடியாமல் போனது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம்பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த தொடரில் உம்ரான் மாலிக்கிற்கு ஆட வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. முன்னாள் ஜாம்பவான்கள் பலருமே உம்ரான் மாலிக்கிற்கு ஆட வாய்ப்பு கிடைக்காததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
அந்தவகையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக்கை அடையாளம் கண்டு வளர்த்துவிட்ட இர்ஃபான் பதானும், மாலிக்கிற்கு விரைவில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.
உம்ரான் மாலிக் குறித்து பேசிய இர்ஃபான் பதான், இந்திய அணியில் இடம்பெற்றாலும், இதுவரை உம்ரான் மாலிக்கிற்கு அறிமுக போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் அவரை அறிமுகம் செய்யுங்கள். அறிமுக போட்டியில் அவர் எப்படி ஆடுகிறார் என்று பாருங்கள். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால் உடனே ஓரங்கட்டிவிடாதீர்கள். இதுவரை 150 கிமீ வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலர் ஒருவரை நாம் பெற்றதே இல்லை. அவர் அதிவேகமாக வீசவல்லவர். எந்த பயிற்சியாளராலும் ஒரு பவுலரை வேகமாக பந்துவீச வைக்க முடியாது. அது இயல்பாகவே வரவேண்டும். அப்படி இயல்பாகவே அதிவேகமாக பந்துவீசக்கூடிய பவுலர் உம்ரான் மாலிக்.
அவரை சிறு சிறு திருத்தங்கள் செய்து, இன்னும் சிறந்த பவுலராக மேம்படுத்தலாம். உம்ரான் மாலிக்கிற்கு முதலில் ஆட வாய்ப்பளியுங்கள். அவர் நன்றாக பந்துவீசினால் தொடர்ந்து வாய்ப்பளிக்கலாம். இல்லையெனில் அவரை அணியில் வைத்திருந்து ஆதரவளிக்கலாம். உம்ரான் மாலிக் மாதிரியான பவுலர்கள் எல்லாம் எப்போதும் கிடைப்பவர்கள் அல்ல. அரிதினும் அரிதாக கிடைப்பவர் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.