கிரிக்கெட்டில் பெரியளவில் சாதித்த 2 சாதனையாளர்களுக்கு கேல் ரத்னா விருது கிடைத்திராத அதிர்ச்சி..!

By karthikeyan VFirst Published Jun 4, 2020, 3:52 PM IST
Highlights

கேல் ரத்னா விருதுக்கு தகுதியான 2 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு கேல் ரத்னா விருது கிடைக்கவில்லை.
 

விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு, நாட்டிலேயே விளையாட்டுத்துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. 

சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் கேல் ரத்னா வென்றிருக்கிறார்கள். ஆனால் கேல் ரத்னா விருதை பெற தகுதியான 2 முன்னாள் ஜாம்பவான்களுக்கு அந்த விருது கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. 

அந்த இருவர், ராகுல் டிராவிட்டும், சவுரவ் கங்குலியும் தான். டிராவிட்டும் கங்குலியும் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பு அளப்பரியது. சூதாட்டப்புகாரில் இந்திய கிரிக்கெட் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த சூழலில், அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று, சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், தோனி ஆகிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு இந்திய அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர் கங்குலி. 

கங்குலியின் தலைமையில் கட்டமைக்கப்பட்ட இந்திய அணி தான், பிற்காலத்தில் 2011ல் உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்றது வேண்டுமானால் தோனி கேப்டன்சியில் இருக்கலாம். ஆனால், தோனி உட்பட அந்த அணியில் இருந்த யுவராஜ், சேவாக், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என பெரும்பாலான வீரர்கள் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. 

இந்திய அணிக்காக, 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களையும் 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11,363 ரன்களையும் குவித்து, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியவர் கங்குலி. அவர் கேல் ரத்னா விருது வென்றதில்லை. 

அதேபோல, கிரிக்கெட் வரலாற்றில் சுயநலத்திற்காக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வெகுசில வீரர்களில் முதன்மையானவர் ராகுல் டிராவிட். அணியின் நலன் மற்றும் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு தனது கெரியர் முழுவதும் ஆடியவர் ராகுல் டிராவிட். தனது ஸ்கோர், சராசரி ஆகியவற்றை பற்றியெல்லாம் கவலையே படாமல், சூழலுக்கு ஏற்றவாறு அணியின் நலனுக்காக ஆடியவர் ராகுல் டிராவிட். 

சுயநலம் கொஞ்சம் கூட இல்லாத ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக, 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13288 ரன்களையும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10889 ரன்களையும் குவித்துள்ளார். இந்திய அணி இக்கட்டான சூழலில் தோல்வியை நோக்கி செல்லும்போதெல்லாம், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வெற்றியை தேடிக்கொடுத்தவர் ராகுல் டிராவிட். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்(சச்சின் - டிராவிட்), டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்(சேவாக் - டிராவிட்) என அனைத்திலுமே டிராவிட்டின் பெயர் இருக்கும். டிராவிட் ஒருமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடுகிறார் என்றால், மறுமுனையில் பேட்டிங் ஆடும் வீரர்களுக்கு அதுவே பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட்டில் ராகுல் டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து ஆடிய இன்னிங்ஸ் காலத்தால் அழியாதது. அந்த இன்னிங்ஸில் 180 ரன்களை குவித்தார் ராகுல் டிராவிட். முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது இந்திய அணி. அந்த வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு அளப்பரியது. 

இதேபோல, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றிய சாதனையாளர் ராகுல் டிராவிட்டுக்கும் கேல் ரத்னா விருது கிடைக்கவில்லை. 
 

click me!