ஓய்வு எப்போது..? மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்

By karthikeyan VFirst Published Jun 3, 2020, 11:03 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பதை இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2 மாதங்களுக்கு மேலாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இந்நிலையில், ஜூலை 8ம் தேதி முதல் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளன.

ஜூன் 4 முதல் 29 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8ம் தேதி தொடங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ரசிகர்கள் இல்லாமல், முழு பாதுகாப்புடன் இந்த தொடர் நடத்தப்பட்டவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி எடுக்க உள்ளனர். 

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியை தொடங்கவுள்ளார். 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், 2002ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

இங்கிலாந்து அணிக்காக 151 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார் ஆண்டர்சன். ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 37 வயதிலும் ஆடுவது மிகவும் அரிதான  விஷயம். ஆனால் ஆண்டர்சன், தனது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக, சரியான நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் இன்னும் ஆடமுடிகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒரு இண்டர்வியூவில் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். கொரோனாவால் சில மாதங்கள் எந்தவித போட்டியிலும் ஆடாமல் ஓய்வில் இருந்ததன் மூலம், எனது கெரியர் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எனவே குறைந்தது இன்னும் ஓராண்டுக்காவது ஆண்டர்சன் ஆடுவார் என்பது உறுதியாகிவிட்டது. 
 

click me!