ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு வீரராக அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி, நுவன் துஷாரா என்று சில வீரர்கள் அறிமுகமாகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு 17ஆவது சீசனில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரச்சின் ரவீந்திரா. இந்த உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி 3 சதம், 2 அரைசதம் உள்பட மொத்தமாக 578 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பவுலிங்கிலும் 5 விக்கெட் கைப்பற்றினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியானது ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது.
இவரைத் தொடர்ந்து 2ஆவது இடத்தில் இருப்பவர் சமீர் ரிஸ்வி. சையது முஸ்தாக் அலி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில்46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். மேலும், சிகே நாயுடு டிராபி தொடரிலும் முச்சம் விளாசி அசத்தினார். இதனால், சிஎஸ்கே ரூ.8.40 கோடி கொடுத்து வாங்கியது.
இவரைத் தொடர்ந்து அடுத்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்டு கோட்சே. இவர், எஸ்.ஏ. டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியானது ரூ.5 கோடி கொடுத்து வாங்கியது.
இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியானது ரூ.4.80 கோடி கொடுத்து இலங்கையைச் சேர்ந்த நுவன் துஷாராவை ஏலத்தில் எடுத்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றினார். அறிமுக வீரர்களுக்கான பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மதுல்லா உமர்சாய்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட உமர்சாய் பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் சிறந்து விளங்குகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் 149 ரன்கள் எடுத்திருந்தார். உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்று 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு 353 ரன்களும் குவித்துள்ளார்.