விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பை அணியானது 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 42ஆவது முறையாக சாம்பியனானது.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷர்துல் தாக்கூர் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்ஸ்ல் 224 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணியில் அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க விதர்பா 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், முஷீர் கான் சிறப்பாக விளையாடி 326 பந்துகள் பிடித்து 10 பவுண்டரி உள்பட 136 ரன்கள் சேர்த்தார். கேப்டன், அஜின்க்யா ரஹானே 143 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் சேர்த்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் எடுக்க, ஷாம்ஸ் முலானி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக மும்பை 2ஆவது இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து மொத்தமாக 537 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலமாக விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விதர்பா அணி 3ஆவது நாள் பேட்டிங் செய்து 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் 4ஆவது போட்டியை தொடங்கியது.
நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியாக இன்றைய 5ஆம் நாள் போட்டி நடந்தது. இதில் விதர்பா அணியானது விக்கெட்டுகளை கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தப் போட்டி டிராவில் முடிந்திருக்கும். ஆனால், சிறப்பாக விளையாடி வந்த கேப்டனும், விக்கெட் கீப்பருமான அக்ஷய் வத்கர் 102 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்ஷ் துபே 65 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் விதர்பா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் மட்டுமே எடுத்து 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை அணி 42ஆவது முறையாக ரஞ்சி டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
விதர்பா 2 முறை டிராபியை வென்றுள்ளது. டெல்லி 7 முறையும், தமிழ்நாடு 2 முறையும், மத்திய பிரதேச அணி 5 முறையும், கர்நாடகா அணி 8 முறையும், பெங்கால் அணி 3 முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. 42ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் 42 என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.