
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடினர். குறிப்பாக மயன்க் அகர்வால் ஆரம்பம் முதலே பெரிய ஷாட்டுகளை அடித்து ஆட, ராகுல் சில பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மயன்க் அகர்வால், 36 பந்தில் 69 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு ராகுலும் மயன்க்கும் இணைந்து 12.4 ஓவரில் 122 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். 51 பந்தில் 61 ரன்கள் அடித்த ராகுல் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். கெய்லும் பெரிய ஷாட்டுகள் ஆடமுடியாமல் தடுமாறியதால், மயன்க் அகர்வால் ஆட்டமிழந்த பின்னரே ரன்வேகம் குறைந்தது. ராகுலும் ஆட்டமிழந்த பின்னர், கெய்ல், பூரன் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தீபக் ஹூடா 13 பந்தில் 22 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் களத்திற்கு வந்த ஷாருக்கான், 5 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 195 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.