பஞ்சாப் கிங்ஸ் ஸ்டார்ட்டிங்லாம் நல்லாத்தான் இருக்கு; ஃபினிஷிங் சரியில்லயேப்பா! சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு

Published : Apr 03, 2022, 09:36 PM IST
பஞ்சாப் கிங்ஸ் ஸ்டார்ட்டிங்லாம் நல்லாத்தான் இருக்கு; ஃபினிஷிங் சரியில்லயேப்பா! சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு

சுருக்கம்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 180 ரன்கள் அடித்து 181 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

சிஎஸ்கே அணி ஒரு மாற்றத்துடனும், பஞ்சாப் கிங்ஸ் அணி 2 மாற்றங்களுடனும் களமிறங்கின. சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே நீக்கப்பட்டு கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் ராஜ் பாவா ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே வைபவ் அரோரா மற்றும் ஜித்தேஷ் ஷர்மா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ட்வைன் ப்ரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரி.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக்கான், ஜித்தேஷ் ஷர்மா, ஒடீன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால், முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். ஆனால் 2வது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். முதல் ஓவரில் மயன்க் அகர்வால் அவுட்டாக, 2வது ஓவரில் பானுகா ராஜபக்சா 9 ரன்னில் ரன் அவுட்டானார்.

14 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஷிகர் தவான் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 32 பந்தில் 60 ரன்கள் அடித்து லிவிங்ஸ்டோனும் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு தவானும் லிவிங்ஸ்டோனும் சேர்ந்து 95 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் அறிமுக வீரர் ஜித்தேஷ் ஷர்மா 17 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்தார். 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் 2 பவர் ஹிட்டர்களான ஷாருக்கான் (6) மற்றும் ஒடீன் ஸ்மித் (3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்ததால், முதல் 10 ஓவரில் 109 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 180 ரன்கள் மட்டுமே அடித்தது.

181 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். கேகேஆருக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, பிற்பாதியில் படுமோசமாக ஆடியது. அதேபோலவே, இந்த போட்டியிலும் முதல் பாதியில் அருமையாக பேட்டிங் ஆடி, 2வது பாதியில் சொதப்பியது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!