முதல் முறையாக தன் மீதான விமர்சனத்துக்கும் கேலி கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்த புஜாரா

By karthikeyan VFirst Published Mar 16, 2020, 3:28 PM IST
Highlights

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் புஜாரா, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய டெஸ்ட் போட்டிகளில், நிலைத்து நின்று ஆடி அணிக்காக வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார் புஜாரா. அதனால் இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட்டின் இடத்தை புஜாரா நிரப்பிவிட்டதாக ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்பட்டார்.

ஆனால் அவரது மந்தமான இன்னிங்ஸ் எப்போதுமே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. புஜாராவின் மந்தமான பேட்டிங் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆனாலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொண்டதேயில்லை. 

விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் தனது இயல்பான ஆட்டத்தையே ஆடிவந்தார். அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமந்தமாக பேட்டிங் ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 81 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அணிக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லாத இன்னிங்ஸை ஆடிச்சென்றார் புஜாரா. முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில் இந்திய அணிக்கு அந்த போட்டியில் இழப்பதற்கு எதுவுமேயில்லை. அதனால் துணிந்து ஆடியிருக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் அந்த இன்னிங்ஸில் நிதானமாக ஆடி நாட்களை கடத்தி, அதன்மூலம் வெற்றியையோ அல்லது டிரா செய்வதற்கோ கூட வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்படியான சூழலில் எதற்காக கட்டை போட்டு நின்றார் என்று யாருக்குமே புரியாத அளவிற்கு, 81 பந்துகள் பேட்டிங் ஆடி 11 ரன்களை மட்டுமே அடித்து விட்டு நடையை கட்டினார் புஜாரா. 

புஜாராவின் மந்தமான இன்னிங்ஸால் கடுப்பான கேப்டன் விராட் கோலி, அந்த போட்டிக்கு பின்னர், புஜாராவை தாக்கும் விதமாக, மெதுவான இன்னிங்ஸ் ஆடியதை கடுமையாக விமர்சித்திருந்தார். புஜாராவை மட்டுமல்ல, ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோருக்கும் உரைப்பதற்காகத்தான் கோலி அப்படி பேசினார்.

ஆனால் அதன்பின்னரும் கொஞ்சம் கூட தனது பேட்டிங் இயல்பை மாற்றிக்கொள்ளாத புஜாரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அப்படித்தான் ஆடினார். அதன்பின்னர் ரஞ்சி இறுதி போட்டியிலும் அதைவிட மோசமாக ஆடினார். பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி இறுதி போட்டியில் 237 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இவ்வாறு புஜாரா மந்தமாக ஆடிக்கொண்டிருக்க, அவரது மந்தமான இன்னிங்ஸை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பயங்கரமாக கிண்டலடித்ததுடன் விமர்சனமும் செய்தனர். 

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து பேசிய புஜாரா,  சமூக வலைதளங்களுக்காக என்னால் பேட்டிங் செய்ய முடியாது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகமாவுள்ளதால், அதையே அதிகமாக பார்க்கின்றனர். அதனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எனது ஆட்டத்தை பற்றியோ டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றியோ சரியாக தெரியவில்லை. எதுவுமே தெரியாமல், நான் மந்தமாக ஆடுகிறேன், அதிகமான பந்துகளை வீணடிக்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள்.

Also Read - டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியும் திராணியும் அவருக்கு மட்டும்தான் இருக்கு! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். எண்டர்டெய்ன் செய்வது எனது பணியல்ல. என்னுடைய இலக்கு என்பது, என்னுடைய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பது மட்டுமே.. அது இந்திய அணியாக இருந்தாலும் சரி.. சவுராஷ்டிரா அணியாக இருந்தாலும் சரி.. எனது அணியின் வெற்றிக்காக மட்டுமே நான் ஆடுவேன். சில நேரங்களில் அதிரடியாக ஆடுவேன். சில நேரங்களில் மிகவும் மெதுவாக ஆடுவேன். உண்மையான கிரிக்கெட் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன். நான் சிக்ஸர்களை விளாசும் பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் அதேநேரத்தில் சமூக வலைதளங்களை நான் பார்ப்பதேயில்லை. நான் சமூக வலைதளங்களுக்காகவோ, ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வதற்காகவோ ஆடும் வீரர் அல்ல என்று புஜாரா தெரிவித்துள்ளார். 
 

click me!