ஷேன் வாட்சன் செம பேட்டிங்.. அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்த ஆட்டநாயகன்

By karthikeyan VFirst Published Mar 16, 2020, 1:13 PM IST
Highlights

ஷேன் வாட்சனின் அதிரடி அரைசதத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 
 

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி அணியின் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான பாபர் அசாம் 32 ரன்கள் அடித்தார். நான்காம் வரிசையில் இறங்கிய கேம்ரூன் டெல்போர்ட்டின் அதிரடியான அரைசதத்தால் அந்த அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது. டெல்போர்ட் 44 பந்தில் 62 ரன்கள் அடித்தார். 

151 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் அகமது ஷேஷாத், டக் அவுட்டானார். இதையடுத்து ஷேன் வாட்சனுடன் குர்ராம் மன்சூர் ஜோடி சேர்ந்தார். வாட்சனும் மன்சூரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

மன்சூர் நிலைத்து நின்று ஆட, வாட்சனோ தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷேன் வாட்சன், 34 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சனின் அதிரடியான அரைசதத்தால் குவெட்டா அணி இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது. வாட்சனுடன் இணைந்து சிறப்பாக ஆடிய மன்சூரும் அரைசதம் அடித்தார். அவர் 40 பந்தில் 63 ரன்கள் அடித்தார். 

Also Read - கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தினம் இன்று - மார்ச் 16.. மாஸ்டர் பிளாஸ்டர் படைத்த வரலாற்று சாதனை

வாட்சனின் அதிரடியான பேட்டிங்கால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!