காட்டடி அடித்த புஜாரா.. கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா.. எதிரில் நின்ற ரோஹித்தே மிரண்டு போற அளவுக்கு அடித்த புஜாரா

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 2:15 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். புஜாராவை மட்டை போட்டு ஆடுபவர் என்று நினைத்தவர்களின் மூக்கை உடைக்கும் விதமாக செம காட்டு காட்டிவருகிறார். 
 

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் எல்கர், டி காக் ஆகியோரின் அபாரமான சதம் மற்றும் டுப்ளெசிஸின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் அந்த அணி 431 ரன்கள் அடித்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலையில்தான் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை முடித்தது. நாளையுடன் போட்டி முடியவுள்ளதால், இன்றைய நாள் ஆட்டத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்காவை இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிட்டால்தான் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு. 

எனவே வெறும் 71 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மயன்க் அகர்வால் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். ரோஹித் ஓரளவிற்கு ஸ்கோர் செய்துகொண்டிருக்க, முதல் 50-60 பந்துகளில் மிகவும் மந்தமாக ஆடி ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அதன்பின்னர் அதிரடியாக ஆட தொடங்கினார். 

ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை விளாசிய புஜாரா, சிக்ஸரும் அடித்து மிரட்டினார். கேசவ் மஹராஜ், டேன் பீட், ஃபிளாண்டர், ரபாடா ஆகிய அனைவரின் பவுலிங்கையும் அடித்து ஆடினார் புஜாரா. 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ரன்களை கடந்து புஜாரா ஆடிவருகிறார். 

மறுமுனையில் ரோஹித் சர்மா அவசரப்படாமல் அதேநேரத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். ரோஹித் - புஜாரா ஆகிய இருவருமே 60 ரன்களை கடந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 
 

click me!