தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி

By karthikeyan VFirst Published Nov 9, 2019, 3:53 PM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. 
 

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நாளை நடக்கிறது. இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளன.

கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது. இரண்டு போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய இடது கை ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஷிகர் தவான் சரியாக ஆடாவிட்டாலும், அவரை உடனடியாக நீக்க வாய்ப்பில்லை. அதனால் கடைசி டி20 போட்டியில் தவான் கண்டிப்பாக ஆடுவார். அதனால் கலீல் அகமதுவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட மட்டுமே வாய்ப்புள்ளது. 

ஏனெனில் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார் கலீல். அந்த போட்டியில் முடிவை தீர்மானிக்கும் 19வது ஓவரை வீசிய அவர், அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை வாரி வழங்கி, இந்திய அணியின் தோல்விக்கு வித்திட்டார். அதேபோல இரண்டாவது போட்டியிலும் 4 ஓவர்களை வீசிய அவர், 44 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இரண்டு போட்டிகளிலுமே அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தார் கலீல். எனவே முதல் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு பெறாத ஷர்துல் தாகூருக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர். 
 

click me!