இனிமேல் ரிஷப் பண்ட்டை யார் நினைத்தாலும் தூக்க முடியாது

By karthikeyan VFirst Published Nov 9, 2019, 3:26 PM IST
Highlights

ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலுமே தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

ரிஷப் பண்ட் தனது கெரியரின் தொடக்கத்தில்தான் இருக்கிறார். ஆனால் இப்போதே அவர் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுகிறார். தோனி என்பவர் மிகப்பெரிய லெஜண்ட். அவருடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது சரியாக இருக்காது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் ஆரம்பத்தில் படுமோசமாக சொதப்பினாலும் இப்போது தேறிவருகிறார். 

அவர் கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாததும், தோனியின் இடத்தை உடனடியாக அவர் நிரப்ப வேண்டும் என்ற மனப்பான்மையில் விமர்சனங்கள் எழுவதுமே அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய ரிஷப் பண்ட், அதை செய்யாமல் தனது நெருக்கடியை மண்டைக்கு ஏற்றி, தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது சூழலுக்கு ஏற்றவாறு அணியின் தேவைக்கு ஏற்ப ஆடுவதா என்பது புரியாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்புகிறார். 

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலுமே ரிஷப் பண்ட் சொதப்பிவருகிறார். அவர் மீதான அழுத்தம், அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக சரியாக ஆடாத ரிஷப், வங்கதேசத்துக்கு எதிராகவும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சொதப்புகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தவறாக ரிவியூ எடுக்க வலியுறுத்திய ரிஷப் பண்ட், இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார்.

இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படுமோசமாக கிண்டலடித்துவருகின்றனர். ஏற்கனவே மோசமான ஆட்டத்தால் டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த ரிஷப் பண்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சொதப்பிவருகிறார். 

எனவே டி20 மற்றும் ஒருநாள் அணிகளிலும் அவர் இடத்தை இழப்பாரோ என்ற சந்தேகம் எழும் நிலையில், ரிஷப் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ரிஷப் பண்ட் திறமையான வீரர். அவர் விஷயத்தில் பொறுமை காத்து அவருக்கான நேரத்தையும் வாய்ப்பையும் கொடுக்க வேண்டும். அவர் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியடைந்துவிடுவார். அதனால் அவருக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

கங்குலியே இவ்வாறு தெரிவித்துவிட்டதால், ரிஷப் பண்ட் இப்போதைக்கு தூக்கப்படுவதற்கான வாய்ப்பேயில்லை. 
 

click me!