தினேஷ் கார்த்திக் அதிரடி.. அசத்தும் தமிழ்நாடு வீரர்கள்.. ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 9, 2019, 2:05 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 

தினேஷ் கார்த்திக் தலைமையில் விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடி இறுதி போட்டிவரை சென்ற தமிழ்நாடு அணி இறுதி போட்டியில், கர்நாடகாவிடம் தோற்றது. விஜய் ஹசாரேவில் அசத்திய தமிழ்நாடு அணி, முஷ்டாக் அலி தொடரிலும் அசத்திவருகிறது. 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜயும் ஜெகதீசனும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் அதிரடியான தொடக்கத்தை அவர்கள் அமைத்து கொடுக்கவில்லை. முரளி விஜய் 29 பந்துகளில் 35 ரன்களும் ஜெகதீஷன் 37 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர். 

14வது ஓவரில்தான் தமிழ்நாடு அணி 100 ரன்களையே எட்டியது. முதல் விக்கெட்டை தமிழ்நாடு அணி இழக்கும்போது 8.3 ஓவரில் வெறும் 54 ரன்களை மட்டுமே தமிழ்நாடு அணி எடுத்திருந்தது. மூன்றாம் வரிசையில் இறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால்தான் 14வது ஓவரிலாவது தமிழ்நாடு அணி 100 ரன்களை எட்டியது. 

அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து அரைசதத்தை 2 ரன்களில் தவறவிட்டு ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 11 பந்தில் 15 ரன்களையும் ஷாருக்கான் 13 பந்தில் 16 ரன்களையும் அடிக்க, தமிழ்நாடு அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. 

156 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் மஹிபால் லாம்ரோர் மட்டுமே 32 ரன்களை அடித்தார். அவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. தமிழ்நாடு பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 
 

click me!