ஒற்றை செயலில் என்னை கவர்ந்தார் தோனி.. உங்களை வரலாறு பெருமைப்படுத்தும்..! பிரதமர் மோடி வாழ்த்து

By karthikeyan VFirst Published Aug 20, 2020, 2:54 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. அவர் இந்திய அணிக்காக  கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என ஒரு முழுமையான கிரிக்கெட்டராக அனைத்துவகையிலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடிய தோனி, 2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் ஓராண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, சென்னையும் தமிழ் மக்களும் மிகவும் நெருக்கமானவர்கள். தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு நிகராக சென்னையை மதிக்கிறார் தோனி. அதனால் சுதந்திர தினத்தன்று சென்னையில் வைத்தே தனது ஓய்வை தோனி அறிவித்தார். தோனி திடீரென ஓய்வறிவித்ததால், அவர் மீண்டும் நீல நிற ஜெர்சியில் இந்திய அணிக்காக ஆடுவதை காண ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச்சை ஏற்பாடு செய்வதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. 

ஓய்வுபெற்ற தோனிக்கு தேசிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தோனியை வெகுவாக புகழ்ந்துள்ளார். தோனியை வாழ்த்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை தோனி வெளியிட்டுள்ளார். 

தோனியை பாராட்டி பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன். இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு தோனியை பெருமைப்படுத்தும். 

2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை தோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே தோனியை சுருக்கி விட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி. சக வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது தோனி தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது என்று பிரதமர் மோடி வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!