BBL: ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸை ஊதித்தள்ளி 4வது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி

By karthikeyan VFirst Published Jan 28, 2022, 5:37 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.
 

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடந்தது. 


ஏற்கனவே தலா 3 முறை கோப்பையை வென்றிருந்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. 2 அணிகளுமே 4வது முறையாக கோப்பையை தூக்கும் முனைப்பில் களமிறங்கின.

மெல்போர்னில் நடந்த ஃபைனலில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி, ஸ்கார்ச்சர்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் (1) மற்றும் ஜோஷ் இங்லிஸ் (13) ஆகிய இருவருமே சொதப்ப, அதன்பின்னர் வந்த முக்கியமான வீரர்களான மிட்செல் மார்ஷ் (5) மற்றும் காலின் முன்ரோ (1) ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 6 ஓவரில் வெறும் 25 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் அஷ்டான் டர்னர் மற்றும் லாரி இவான்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி 5வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 104 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டர்னர் 35 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த இவான்ஸ் 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்களை குவிக்க உதவினார்.

இதையடுத்து 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் டேனியல் ஹியூக்ஸ் மட்டுமே 42 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே மிக மிகச்சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 17வது ஓவரில் வெறும் 92ரன்களுக்கு ஆல் அவுட்டானது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.

79 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 

click me!