பாகிஸ்தானின் கௌரவத்தை கெடுக்குற மாதிரி பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும்..! ரமீஸ் ராஜாவுக்கு கடும் கண்டனம்

By karthikeyan VFirst Published Oct 11, 2021, 10:56 PM IST
Highlights

பாகிஸ்தானின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்துமாறு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் மெஹ்மூத் வலியுறுத்தியுள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியான பிரச்னைகளால், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் ஆடுவதை கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது இந்தியா. அதன்பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன.

மற்ற நாட்டு அணிகளும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவந்தன. அண்மைக்காலமாகத்தான் ஒருசில அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகின்றன. அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கு முன்பாக, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுவதாக இருந்தது. 

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய, அதே காரணத்தை காட்டி இங்கிலாந்தும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது.

அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50 சதவிகித நிதி ஐசிசியிடம் இருந்தே வருகிறது. ஐசிசிக்கு 90 சதவிகித நிதி பிசிசிஐயிடம் இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நிதி கொடுக்கக்கூடாது என்று இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் அழித்துவிடும் என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

ஆனால் ரமீஸ் ராஜாவின் பேச்சால் கடும் அதிருப்தியடைந்த அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் மெஹ்மூத், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈட்டிக்கொடுக்கும் நிதி குறித்த ரமீஸ் ராஜாவின் கருத்து தேவையற்றது. அவரது கருத்து பாகிஸ்தானின் கௌரவத்தை கெடுக்கும் விதமாக இருந்தது. எனவே உடனடியாக ரமீஸ் ராஜா அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மெஹ்மூத் தெரிவித்துள்ளார்.
 

click me!