2வது இன்னிங்ஸில் போராடும் பாகிஸ்தான்..! கடைசி நாள் ஆட்டத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

By karthikeyan VFirst Published Aug 24, 2020, 11:30 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடிவருகிறது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜாக் க்ராவ்லியின் இரட்டை சதம்(267) மற்றும் ஜோஸ் பட்லரின் சதத்தால்(152) முதல் இன்னிங்ஸில் 583 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில், கேப்டன் அசார் அலி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அசார் அலி மட்டுமே மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தார். ரிஸ்வான் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து தன் பங்கிற்கு அரைசதம் அடித்து 53 ரன்கள் சேர்த்தார். அசார் அலி 141 ரன்களை குவித்ததால், அந்த அணி 273 ரன்கள் அடித்தது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறை பாகிஸ்தான் வீரர்கள் சுதாரித்து ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர் ஆகியோரின் பவுலிங்கை சமாளித்து நிதானமாக ஆடினர். 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 41 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டு மீண்டும் தொடங்கியது. 

திரும்பி களத்திற்கு வந்ததும், ஸ்டூவர்ட் பிராடின் பந்தில் ஷான் மசூத் எல்பிடபிள்யூ ஆகி 18 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அபித் அலியுடன் கேப்டன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். அபித் அலி மற்றும் அசார் அலி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். ஆனால் அபித் அலியை 42 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது அருமையான பந்தின் மூலம் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார். இது ஆண்டர்சனின் 599வது டெஸ்ட் விக்கெட். 

இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார் ஆண்டர்சன். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 56 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் அடித்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேப்டன் அசார் அலி 29 ரன்களுடனும் பாபர் அசாமும் களத்தில் உள்ளனர். 

ஆண்டர்சன் 600 விக்கெட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால், நாளைய தினம் எப்படியாவது சிறப்பாக பேட்டிங் ஆடி அணியை தோல்வியிலிருந்து மீட்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணி உள்ளது. எனவே கடைசி நாளான நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
 

click me!