சீட்டுக்கட்டு போல் சரிந்த பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டர்..! மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்

Published : Aug 13, 2020, 10:49 PM IST
சீட்டுக்கட்டு போல் சரிந்த பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டர்..! மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் நன்றாக தொடங்கினாலும், பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.  

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவருக்கு பதிலாக ஜாக் கிராவ்லி மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் நீக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார் ஃபவாத் ஆலம். 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. கடந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த ஷான் மசூத், இம்முறை 3வது ஓவரிலேயே ஆண்டர்சனின் அருமையான இன்ஸ்விங்கில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் அசார் அலியும் மற்றொரு தொடக்க வீரரான அபித் அலியும் இணைந்து முதல் செசனை சிறப்பாக ஆடி முடித்தனர். முதல் செசனில் ஷான் மசூத்தின் விக்கெட்டை மட்டுமே இங்கிலாந்து வீழ்த்தியது. 

அசார் அலியும் அபித் அலியும் இங்கிலாந்து பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு ஆடி, 2வது விக்கெட்டுக்கு ஓரளவிற்கு நம்பிக்கையளித்தனர். முதல் செசன் முடிவில் அபித் அலி 33 ரன்களும் அசார் அலி 20 ரன்களும் அடித்திருந்தனர். உணவு இடைவேளை முடிந்து வந்ததும் இரண்டாவது செசனில் ஒரு ரன் கூட அடிக்காமல் கேப்டன் அசார் அலி ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் தான் இவரையும் வீழ்த்தினார்.

அதன்பின்னர் அபித் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அபித் அலி, 60 ரன்களில் சாம் கரனின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, ஆசாத் 5 ரன்னில் பிராடின் பந்திலும், 11 ஆண்டுகளுக்கு கம்பேக் கொடுத்த ஃபவாத் ஆலம், கிறிஸ் வோக்ஸின் பந்தில் டக் அவுட்டும் ஆகினர். ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டது. டீ பிரேக்கிற்கு பின்னர் சிறிது நேரம் ஆடிய நிலையில் மறுபடியும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. 

முதல் நாள் ஆட்டத்தின் பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. பாபர் அசாம் 25 ரன்களுடனும் முகமது ரிஸ்வான் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?