
ஆஸ்திரேலிய அணியில் 1996லிருந்து 2008 வரை 12 ஆண்டுகள் ஆடினார் ஆடம் கில்கிறிஸ்ட். 1999, 2003, 2007 ஆகிய மூன்று உலக கோப்பைகளையும் தொடர்ச்சியாக வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஆடியவர். ஹாட்ரிக் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் மூன்று தொடர்களிலுமே ஆடினார் கில்கிறிஸ்ட்.
கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். விக்கெட் கீப்பிங்கில் கில்கிறிஸ்ட் தான் டிரெண்ட் செட்டர். விக்கெட் கீப்பங்கை பொறுத்தமட்டில் கிமு(கில்கிறிஸ்ட்டுக்கு முன்), கிபி(கில்கிறிஸ்ட்டுக்கு பின்) என்று இரு காலங்களாக பிரிக்கலாம். அந்தளவிற்கு விக்கெட் கீப்பிங்கில் அசத்தியவர் கில்கிறிஸ்ட். அவருக்கு பின்னர் தான் சங்கக்கரா, மார்க் பவுச்சர், தோனி ஆகியோர் தலையெடுத்தனர்.
96 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கில்கிறிஸ்ட், 379 கேட்ச்களையும் 37 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் ஆடி 417 கேட்ச்களை பிடித்துள்ள கில்கிறிஸ்ட், 55 ஸ்டம்பிங் செய்துள்ளார். 2008ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டதால், அவர் டி20 போட்டிகளில் பெரிதாக ஆடியதில்லை.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளில் பங்கெடுத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் 998 விக்கெட்டை வீழ்த்த காரணமாகயிருந்த மார்க் பவுச்சர் முதலிடத்திலும், 905 டிஸ்மிஸல்களுடன் கில்கிறிஸ்ட் இரண்டாமிடத்திலும் இருக்கிறார். 829 டிஸ்மிஸல்களுடன் தோனி மூன்றாமிடத்தில் இருக்கிறார்.
தோனியின் கிரிக்கெட் கெரியர் கில்கிறிஸ்ட்டை விட அதிகம். கில்கிறிஸ்ட்டை விட அதிகமான போட்டிகளில் தோனி ஆடியிருந்தாலும், கில்கிறிஸ்ட் தான் தோனியை விட அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்.
அப்பேர்ப்பட்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான கில்கிறிஸ்ட், 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட்(அடிலெய்டில் நடந்த டெஸ்ட்) போட்டிக்கு பின்னர் திடீரென ஓய்வு அறிவித்தார். அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரரும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவருமான விவிஎஸ் லட்சுமணனின் கேட்ச்சை விட்டதால் தான் கில்கிறிஸ்ட் அந்த போட்டியுடன் ஓய்வு அறிவித்தார் என்று ஒரு டாக் உள்ளது.
அதுகுறித்து ஒரு இண்டர்வியூவில் பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், விவிஎஸ் லட்சுமணன் மாதிரியான ஒரு வீரருக்கு டெஸ்ட் போட்டியில் கேட்ச்சை கோட்டைவிட்டதே, போதுமான காரணம். லட்சுமணன் மாதிரி வீரருக்கெல்லாம் 2வது வாய்ப்பே கொடுக்கக்கூடாது என்றார் கில்கிறிஸ்ட்.