இந்திய அணியை அவதூறாக பேசிய கெய்ல், ரசல், ஹோல்டர்..! கொளுத்திப்போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 31, 2020, 9:11 PM IST
Highlights

2019 உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான லீக் சுற்று போட்டியில், இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றனர். 
 

2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. 

அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதை இந்தியா விரும்பாது; எனவே இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்கும் என்று, அந்த போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அந்த போட்டியில் இந்திய அணி ஆடிய விதம் தனக்கு வியப்பளித்ததாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், புத்தகத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து அதுகுறித்த விமர்சனத்தை மீண்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களை முன்வைக்க தொடங்கிவிட்டனர். 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை இந்தியா விரும்பாது. எனவேதான் இங்கிலாந்திடம் தோற்றது என்பதை நான் தொடர்ந்து கூறிவருகிறேன். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் எளிதாக அடிக்கவல்ல தோனி தடுப்பாட்டம் ஆடினார். அதுவே தோற்பதற்காகத்தான் என்று அப்துல் ரசாக் தெரிவித்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹமதுவும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நேரடியாக அதை சொல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தன்னிடம் அப்படி சொன்னதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள முஷ்டாக் அஹமது, நான் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பணிபுரிந்தேன். அப்போது, இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றபிறகு, ஜேசன் ஹோல்டர், கிறிஸ் கெய்ல் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய மூவரும் என்னிடம் வந்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை இந்திய அணி விரும்பவில்லை. அதனால் இங்கிலாந்திடம் தோற்றது என்று தெரிவித்ததாக முஷ்டாக் அஹமது கூறியுள்ளார்.
 

click me!