என்னடா இப்படி பண்றீங்க..? ரோஹித் - கோலி மீது செம கடுப்பாகி திட்டிய தோனி

By karthikeyan VFirst Published May 31, 2020, 7:48 PM IST
Highlights

2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றில், தோனி தன் மீதும் ரோஹித் மீதும் கோபப்பட்ட சம்பவம் குறித்து விராட் கோலி பகிர்ந்துள்ளார். 
 

தோனியால் வளர்த்தெடுக்கப்பட்டு இன்றைக்கு தலைசிறந்த வீரர்களாக வலம்வருபவர்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும். 2007-08 காலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியில் அறிமுகமானார்கள். 

ரோஹித்துக்கும் கோலிக்கும் தோனி மிகுந்த ஆதரவாக இருந்தார். கோலியாவது தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் நிரந்தர இடத்தை பிடித்ததுடன், கடும் உழைப்பால், படிப்படியாக தலைசிறந்த வீரராக வளர்ந்தார். ஆனால் கெரியரின் தொடக்கத்தில் சரியாக ஆடாததால் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறிய ரோஹித் சர்மாவிற்கு தொடர் வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல், அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டு அவரது கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது தோனிதான். 

தோனியின் நிழலில், அவருடனேயே சிறந்த வீரர்களாக உருவெடுத்த ரோஹித்தும் கோலியும் அதை எப்போதுமே நினைத்து பார்த்து, தோனி மீதான மரியாதையை வெளிப்படுத்திவருகின்றனர். 

கோலி, தான் கேப்டன் ஆனதற்கே தோனி தான் காரணம் என்று அஷ்வினுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் தெரிவித்தார். அதே உரையாடலில், தோனி அவர்கள் மீது அதிருப்தியடைந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார். 

2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் குறித்து கோலி அஷ்வினிடம் தெரிவித்தார். 

“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி அது.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பாகிஸ்தான் 329 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் வீரர்கள் தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். அந்த சமயத்தில், நானும் ரோஹித்தும் ஒரு பந்தை விரட்டி சென்றபோது, இருவரும் மோதிக்கொண்டோம். ஒரு ரன் மட்டுமே போயிருக்க வேண்டிய அந்த இடத்தில் நாங்கள் மோதிக்கொண்டு, பந்தை பிடித்து வீச நேரமானதால், பாகிஸ்தான் வீரர்கள் மூன்று ரன்கல் ஓடிவிட்டனர்.

நான் டீப் மிட் விக்கெட்டில் இருந்து ஓடிவந்தேன். ரோஹித் டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்து ஓடிவந்தார். இருவரும் மோதியதால் ஃபீல்டிங்கில் தாமதமானதால் மூன்று ரன்கள் போய்விட்டது. இப்படி முட்டிக்கொண்டு தேவையில்லாமல் 3 ரன்களை கொடுத்துவிட்டார்களே என்று கோபமாக திட்டினார். அந்த பந்து நீங்கள்(அஷ்வின்) போட்டது தான்.

அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆனால் ஆட்டம் சூடுபிடித்திருந்த அந்த நிலையில், நாங்கள் அப்படி செய்தது தோனியை அதிருப்தியடைய செய்தது என்று கோலி தெரிவித்துள்ளார். 

அந்த குறிப்பிட்ட போட்டியில் கோலியின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தான் கோலி அவரது அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!