PAK vs AUS: பாபர் அசாம், இமாம் உல் ஹக் அபார சதம்! 349 ரன்கள் என்ற இலக்கை 49 ஓவரில் அடித்து பாக்., அபார வெற்றி

Published : Apr 01, 2022, 02:24 PM IST
PAK vs AUS: பாபர் அசாம், இமாம்  உல் ஹக் அபார சதம்! 349 ரன்கள் என்ற இலக்கை 49 ஓவரில் அடித்து பாக்., அபார வெற்றி

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 349 ரன்கள் என்ற கடினமான இலக்கை 49 ஓவர்களில் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.  

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை 1-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டும், 3ம் வரிசையில் இறங்கிய பென் மெக்டெர்மோட்டும் இணைந்து அபாரமாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 70 பந்தில் 89 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

ஆனால் மெக்டெர்மோட் சதமடித்தார். 104 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லபுஷேன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 33 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை விளாசினார். சீன் அபாட் 16 பந்தில் 28 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 348 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 349 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

349 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமானும் இமாம் உல் ஹக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த ஃபகர் ஜமான் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இமாம் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் அபாரமாக ஆடினார்.

சிறப்பாக ஆடி சதமடித்த இமாம் உல் ஹக் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலக்கை வெறித்தனமாக விரட்டிய பாபர் அசாம் சதமடித்தார். 83 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 114 ரன்களை குவித்து பாபர் அசாம் ஆட்டமிழந்தார். பாபர் அசாமும் இமாம் உல் ஹக்கும் இணைந்து இலக்கை எளிதாக்கிவிட்டு சென்றதால், பின்வரிசையில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை முடித்துவைத்தார். 49 ஓவர்களிலேயே 349 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தானின் இந்த வெற்றியையடுத்து, ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்