ஐசிசி ஒருநாள் தரவரிசை அப்டேட் செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி விட்டார் அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை அப்டேட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டனும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இணைந்துவிட்டவருமான பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
886 புள்ளிகளுடன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ராசி வாண்டர்டசன் 777 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் ஃபகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் முறையே 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளனர்.
738 புள்ளிகளுடன் ஷுப்மன் கில் 5ம் இடத்தில் உள்ளார். டாப் 5 இடங்களில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றனர். 6ம் இடத்தில் டேவிட் வார்னர் உள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரில் விராட் கோலியை தவிர வேறு யாருமே டாப் 10ல் இடம்பிடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களும் இந்திய ஜாம்பவான்களுமான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் முறையே 8 மற்றும் 10ம் இடங்களில் உள்ளனர்.
விராட் கோலி 719 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் இருக்கும் நிலையில், அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டார் 722 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய 2 மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களை பின்னுக்குத்தள்ளி ஹாரி டெக்டார் 7ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஹாரி டெக்டார், 2வது போட்டியில் 140 ரன்களை குவித்து அசத்தினார். ஹாரி டெக்டார் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், வங்கதேச தொடர் அவரை ஒருநாள் தரவரிசையில் நல்ல இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.