
ஐபிஎல் 16வதுசீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அனைவரையும் கவர்ந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, ஷிவம் துபே ஆகியோர் இந்த சீசனில் அருமையாக ஆடிவருகின்றனர். இவர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
ஷிவம் துபே இதற்கு முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் அபாரமாக ஆடிவருகிறார். இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 363 ரன்களை குவித்துள்ளார் ஷிவம் துபே. இந்த சீசனில் ஃபாஃப் டுப்ளெசிஸ் அதிக சிக்ஸர்களை விளாசியுள்ள நிலையில், 30 சிக்ஸர்களை விளாசியுள்ள ஷிவம் துபே, 2ம் இடத்தை க்ளென் மேக்ஸ்வெல்லுடன் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அபாரமாக எதிர்கொண்டு ஆடி ஸ்கோர் செய்கிறார். ஸ்பின் பவுலிங்கை மிகத்திறம்பட எதிர்கொண்டு பெரிய ஷாட்டுகளை ஆடி ஸ்கோரை உயர்த்துகிறார் ஷிவம் துபே. யுவராஜ் சிங்குடன் ஒப்பிடப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார் துபே.
இந்நிலையில், துபே குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஷிவம் துபே மிகச்சிறந்த வீரர். அவர் பேட்டிங் ஆடும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் ஷிவம் துபேவை கண்டிப்பாக ஆடவைக்கலாம். ஏனெனில் அவர் சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த சிக்ஸர்களை அடித்த வீரர் துபே தான். அவர் சூர்யகுமார் யாதவுக்கே போட்டியாக உருவெடுத்துள்ளார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.