இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 16ஆவது எடிஷனை நடத்துகின்றன. இதில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இன்னும் 2 போட்டிகளில் சூப்பர் 4 போட்டியும் முடிகிறது. இதில், நேற்று நடந்த 4ஆவது சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
IND vs SL: அனில் கும்ப்ளே, அஜித் அகர்கர் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
முதலில் ஆடிய இந்தியா 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் துனித் வெல்லலகே இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதே போன்று சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இலங்கை குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழலில் சுருண்டது. இலங்கை 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதைத் தொடர்ந்து நாளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது சூப்பர் 4 போட்டி நடக்க உள்ளது. இதில், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏற்கனவே வங்கதேச அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: கடைசி வரை போராடி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
இதுவரையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 155 போட்டிகளில் 92 போட்டிகளில் பாகிஸ்தானும், 58 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டவில்லை. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் 18 போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. வெளி மைதானத்தில் நடந்த போட்டிகளில் 18 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பொதுவான இடங்களில் நடந்த போட்டிகளில் 56 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.