இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தாலும் இந்தியாவில் தான் ஐபிஎல் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசியின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிய போது இன்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!
ஆனால், அதே தேதியில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து நம்பத தகுந்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலின் போது எந்த மாநிலமும் போட்டியை நடத்த விரும்பாத நிலையில் நியாயமான காரணத்துடன் போடியானது வேறொரு இடத்திற்கு மாற்றப்படுமே தவிர வெளிநாட்டில் நடத்த எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 ஏலத்தின் முடிவிற்குப் பிறகு அணிகள் ஏற்கனவே தங்கள் அணிகளை பலப்படுத்தியுள்ளன.
இந்த ஏலமானது அதிக விலை கொடுத்த வீரர் என்ற சாதனையை இரண்டு முறை முறியடித்தது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று மற்றொரு வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.20.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.