
2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முறை உலகக்கோப்பையை யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனலான 'Ash ki Baat'-இல் இது குறித்துப் பேசிய அஸ்வின் தெரிவித்த கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
“தொடக்க ஆட்டங்களிலேயே இந்தியா போன்ற வலுவான அணிகள் அமெரிக்கா, நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிகளுடன் மோதுவது ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும். இந்தியா vs இங்கிலாந்து அல்லது இந்தியா vs இலங்கை போன்ற விறுவிறுப்பான போட்டிகள் தொடக்கத்திலேயே இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு ஐசிசி (ICC) தொடர் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. 1996, 1999 மற்றும் 2003 காலக்கட்டங்களில் உலகக்கோப்பை என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். அப்போதுதான் அதற்கான அட்டவணையை அச்சிட்டு, கார்டுகளைச் சேகரித்து ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால் இப்போது அந்த 'மேஜிக்' காணாமல் போய்விட்டது.” என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட்டின் (ODI) எதிர்காலம் குறித்தும் அஸ்வின் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“2027 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் வடிவம் உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகமே. டி20 லீக்குகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் 50 ஓவர் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.
தற்போது விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் தொடர்களைக்கூட மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஆடுவதே காரணம். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் கிரிக்கெட்டைப் பார்க்க ஆள் இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி” என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
“கிரிக்கெட்டைத் தக்கவைக்க வேண்டுமானால் ஃபிபா (FIFA) உலகக்கோப்பை போல 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் முக்கியத் தொடர்களை நடத்த வேண்டும். அப்போதுதான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகும்” என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.