
ஐபிஎல் 15வது சீசனில் நேற்று புனேவில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவும்(52), திலக் வர்மாவும்(38) இணைந்து அருமையாக பேட்டிங் ஆடினார். பொல்லார்டு கடைசி ஓவரில் 3 சிக்ஸர் விளாசி நன்றாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 161 ரன்கள் அடித்தது மும்பை அணி.
162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில் ரஹானே(7), ஷ்ரேயாஸ் ஐயர்(10), சாம் பில்லிங்ஸ்(17), நிதிஷ் ராணா(8), ஆண்ட்ரே ரசல்(11) ஆகியோர் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் தட்டுத்தடுமாறி களத்தில் நீடித்து அரைசதம் அடித்தார்.
இலக்கு மிகக்கடினமானது இல்லையென்றாலும், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மும்பை அணி நம்பிக்கையுடன் போராடியது. ஆனால் டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் பாட் கம்மின்ஸ் அடி நொறுக்கிவிட்டார். அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி அந்த ஓவரிலேயே இலக்கை எட்டி ஆட்டத்தை முடிக்கவைத்தார் கம்மின்ஸ். 15 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார் கம்மின்ஸ். 5 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற, மும்பை அணி இந்த சீசனில் 3வது தோல்வியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா ஆகிய இருவருக்கும் அவர்களது போட்டி ஊதியத்தில் 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் என்ன நடத்தை விதிகளை மீறினார்கள் என்று குறிப்பிடவில்லை.
ராணா அவுட்டாகி செல்லும்போது, அவுட்டான விரக்தியில் பவுண்டரி லைனில் இருந்த டிஜிட்டல் போர்டின் மீது பேட்டால் அடித்துவிட்டு சென்றார். ஒருவேளை அதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பும்ரா என்ன செய்தார் என்று தெரியவில்லை.